கொலிமா ஆறு
உருசியாவில் உள்ள ஒரு ஆறு / From Wikipedia, the free encyclopedia
கொலிமா ஆறு (Kolyma River) (உருசியம்: Колыма́, பஒஅ: [kəlɨˈma]) சைபீரியாவின் வடகிழக்குப் பகுதியில் ஓடும் ஒரு ஆறு ஆகும். இதன் வடிநிலப்பகுதியானது சகா குடியரசு, சுகோத்கா தன்னாட்சி வட்டாரம், மற்றும் ருசியாவின் மகதான் மாகாணம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும். குலு ஆறு சங்கமிக்கும் இடத்தில் இது தொடங்குகிறது. இந்த ஆறு 69°30′N 161°30′E என்ற இடத்தில் ஆர்க்டிக் பெருங்கடலின் பகுதியாக விளங்கும் கிழக்கு சைபீரியக் கடலின் கொல்ய்மா வளைகுடாவில் கடலுடன் கலக்கிறது. கொல்ய்மா ஆறானது 2,129 கிலோமீட்டர்கள் (1,323 mi) நீளமுடையது. இதன் வடிநிலத்தின் பரப்பானது 644,000 சதுர கிலோமீட்டர்கள் (249,000 sq mi) ஆகும்.
கொலிமா ஆறானது ஒவ்வொரு ஆண்டும் 250 நாட்கள் வரை பல மீட்டர்கள் ஆழப்பகுதி வரை உறைந்து காணப்படுகிறது. சூன் மாதத் தொடக்கம் முதல் அக்டோபர் மாதம் வரை மட்டுமே பனிக்கட்டியாக உள்ள நிலையிலிருந்து மாறி ஓடும் நீராக காணப்படுகிறது. சகா குடியரசின் கொல்ய்ம்சுகோயே பகுதியில் இந்த ஆற்றால் வெளியேற்றப்படும் சராசரி நீரின் அளவானது 3254 கனமீ/விநாடி ஆகவும் மிக அதிகபட்சமாக 1985 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் பதிவுசெய்யப்பட்ட 26201 கனமீ/விநாடி அளவும், குறைந்தபட்சமாக ஏப்ரல் 1979 இல் பதிவு செய்யப்பட்ட 30.6 கனமீ/விநாடி அளவும் இருக்கிறது. [1]