நடுநிலக் கடல்
அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதி / From Wikipedia, the free encyclopedia
நடுநிலக் கடல், மத்தியதரைக் கடல், நடுத்தரைக் கடல் அல்லது நண்ணிலக் கடல் (Mediterranean Sea) என்பது அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியாகும். இது ஏறத்தாழ நாற்புறமும் நிலப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. வடக்கில் ஐரோப்பாவும், அனத்தோலியாவும் தெற்கே வடக்கு ஆப்பிரிக்காவும், கிழக்கில் ஆசியாவும் உள்ளன. இது அண்ணளவாக 25 இலட்சம் சதுர கிலோமீட்டர் (965,000 சதுர மைல்கள்) பரப்பளவு கொண்டது. அத்திலாந்திக் பெருங்கடலுடனான இதன் தொடுப்புப் பகுதி 14 கிலோமீட்டர் மட்டுமே அகலமாகக் கொண்டது. இத் தொடுப்பு, ஜிப்ரால்ட்டர் நீரிணை என அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் இக்கடல் மெடிட்டேரியன் சீ என அழைக்கப்படுகிறது. இக்கடலின் சராசரி ஆழம் 1,500 m (4,900 அடி) ஆக உள்ளது; அயோனியன் கடலில் உள்ள கலுப்சோ டீப் என்றவிடத்தில் மிகக்கூடிய ஆழமாக 5,267 m (17,280 அடி) பதியப்பட்டுள்ளது.
மெடிட்டேரியன் என்ற சொல் மடுதரை (மடு (Cavity) + தரை (Land Surface)) என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு என்றும் கூறப்படுகிறது. பண்டைக்காலத்தில் இக் கடற்பகுதி, மெசொப்பொத்தேமியா, எகிப்து, செமிட்டிக், பாரசீகம், போனீசிய, கார்த்தஜீனிய, கிரேக்கம் மற்றும் ரோமன் ஆகிய பல்வேறு நாகரீகங்களுக்கு இடையிலான வணிக மற்றும் பண்பாட்டுத் தொடர்புகளுக்கான முக்கியமான பாதையாக இருந்து வந்தது. மேற்கத்திய நாகரீகத்தின் தோற்றம் அதன் வளர்ச்சி என்பன பற்றிப் புரிந்துகொள்வதற்கு மத்தியதரைக் கடலின் வரலாற்றை அறிந்துகொள்வது இன்றியமையாததாகும்.[3]
மொத்தம் 22 நாடுகள் இதன் கரைகளில் அமைந்துள்ளன.